#365RQS3 – Season 3 – Overall Positions & Statistics

அனைவருக்கும் முதற்கண் வணக்கம்.

நண்பர்களின் தூண்டுதலால் கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த 365 ராஜா குவிஸ் சீஸன் 3 இன்றுடன் இனிதே நிறைவடைகிறது. கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் எங்களது நன்றி.

அனைவரும் பல்வேறு புதிர்களுக்கு இது வரை கொடுத்த சரியான பதில்கள் எல்லாவற்றையும் கணக்கில் சேர்த்துவிட்டோம்.

முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியல்:

* முதலாம் இடம்: 365 புள்ளிகள்

    ரிஷி @i_VR, முத்தையா @muthiahrm, ராஜபாலன் @rajabalanm

* இரண்டாமிடம்: 364 புள்ளிகள்

    கார்த்திக் @kaarthikarul, விஜய் @maestrosworld, பரணிராஜன் @tparavai

* மூன்றாமிடம்: 362 புள்ளிகள் – ஆழிமதி @_obfuscated_

* நான்காமிடம்: 361 புள்ளிகள் – ஸ்ரீநிவாசன் @Qatarseenu

* ஐந்தாமிடம்: 360 புள்ளிகள் – நித்யா @nithyalaji

* ஆறாமிடம்: 357 புள்ளிகள் – உஷாராணி @usharanims

* ஏழாமிடம்: 356 புள்ளிகள் – சுஷிமா சேகர் @amas32

* எட்டாமிடம்: 347 புள்ளிகள் – விவேக் @iTamizh

* ஒன்பதாமிடம்: 335 புள்ளிகள் – பாலாஜி @vbss75

* பத்தாமிடம்: 281 புள்ளிகள் – சாந்தி @shanthi95

போட்டியில் கலந்துகொண்ட அனைவரின் புள்ளிகள் மற்றும் இடங்களின் பட்டியல் இதோ..

Score

இந்த போட்டியில், ஒரு வருடமாக உற்சாகமாக பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி – சரவணன் மற்றும் தேவா

malabar_gold_ilaiyaraja_tamil_advt

 

Advertisements

#365RQS3 – நினைவலைகள் – பகுதி 2 – சரவணன்

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

ஒரு வருட காலமாக உங்கள் அனைவரின் ஆதரவோடு நடைபெற்ற 365RQ Season 3 கடந்த வெள்ளியன்று நிறைவடைந்த போது, எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சவாலான ஒரு பொறுப்பை இயன்ற அளவு சிறப்பாக நடத்திவிட்ட சந்தோஷம் இருந்தாலும், இவ்வளவு சீக்கிரம் போட்டி முடிந்துவிட்டதே என்ற வருத்தமும் எங்களை ஆட்கொண்டதுதான் உண்மை.

365 ராஜா குவிஸ் சீஸன் 3 ஐ நாங்கள் நடத்துவோம் என்பது கனவிலும் எதிர்பாராத ஒன்று. ஏற்கனவே ராஜாவின் இசைக்குத் தீவிர ரசிகனாக இருந்தாலும், ரெக்ஸ் அருள் மாஸ்டர் மிகச் சிறப்பாக ஆரம்பித்து நடத்திய சீஸன் 1 ல் தான், ராஜா என்னும் இசைச் சாகரத்தை அது வரை கரையில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நான் உள்ளிறங்கி நீந்தவே ஆரம்பித்தேன்.

திடீரென்று ஒரு நாள் நண்பர் ப்ரசன்னா தொடர்பு கொண்டு சீஸன் 3 ஐ நடத்தச் சொன்னபோது மிகவும் தயங்கினேன். ஏனெனில் இதற்கு முன் எனக்குத் தமிழில் பதிவு எழுதிய அனுபவமே கிடையாது. ராஜாவின் பாடல்களை உணர்வு பூர்வமாக ரசிப்பேனே ஒழிய, இசை ஞானம் என்றெல்லாம் ஒன்றும் எனக்குக் கிடையாது. நான் எழுதி யார் படிப்பார்கள் என்ற தயக்கம் ஒரு புறம், மாதம் 20 நாட்கள் அலுவல் காரணமாக பயணத்தில் இருக்கும் என்னால் இதை ஒழுங்காகச் செய்யமுடியுமா என்ற கேள்வி இன்னொரு புறம்.

இதைச் சொன்னபோது அதற்கு ஒரு நல்ல உபாயமும் நண்பர் ப்ரசன்னாவே சொன்னார். அவரது பால்ய நண்பரான தேவாவைக் கேட்டுப் பாருங்களேன், இருவர் சேர்ந்து நடத்தினால் இது சரியாக வரும் என்றார். அந்த யோசனையை ஏற்று நண்பர் தேவாவை அழைத்ததும், அவரும் அழைப்பை ஏற்றுக் கொண்டதும்தான் இந்த சீஸனின் நல்ல துவக்கத்துக்கான வித்து.

நேற்றைய பதிவில் நண்பர் தேவா என்னைப் பற்றி பெருந்தன்மையாக சில விஷயங்களைச் சொல்லி இருந்தாலும், இந்தப் போட்டி நடக்கும்போது நான் அவரைச் செய்த தொந்தரவுக்கு அளவே இல்லை என்பதுதான் உண்மை. அவர் தேர்வு செய்த பாடல்களுக்குப் பதிவு எழுதுவது மட்டுமல்லாமல், நாங்கள் இருவரும் தேர்வு செய்த பாடல்களுக்கான இசைத் துணுக்குகளை வெட்டுவது, அவைகளை தகுந்த தளத்தில் ஏற்றும் முழுப் பொறுப்பையும் அவரே ஏற்று அதனைச் சிறப்பாகச் செய்தார்.

எத்தனையோ முறை நான் பாடல்களை தேர்ந்தெடுத்துவிட்டு, அவர் அதனை வெட்டி தளத்தில் ஏற்றியபின் “இது எனக்குப் பிடிக்கவில்லை தேவா, வேறு பாடல் போகலாம்” என்று கடைசி நேரத்தில் மாற்றியிருக்கிறேன். பொறுமையாக எதுவும் சொல்லாமல், மீண்டும் களப் பணியில் இறங்குவார். பொது மக்களுக்குச் சேராத பல அரிய பாடல்களைத் தரவேண்டும் என்ற அவரின் தாகம் எனக்குப் புரிந்தாலும், ”இந்தப் பாடல் ரொம்பக் கஷ்டமாச்சே, தந்தே ஆக வேண்டுமா” என்றெல்லாம் ஆழக் கடலில் தேடிய முத்தாய் பாடலைத் தேர்வு செய்த அவரிடம் வாதம் செய்ததுண்டு. ஆனாலும் நிதானம் காத்து, இந்த ஒரு வருட காலம் அளப்பரிய பங்களிப்பைக் கொடுத்த அவருக்கு என்னால் நன்றி மட்டுமே சொல்லி நகர்ந்துவிட முடியாது. ஆயுட் காலத்துக்குமான நட்பே அதற்கு ஈடாகும்.

இந்த சீஸனில் எங்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தது பாடல்களைத் தேர்வு செய்வதே. ஏற்கனவே முதலிரண்டு சீஸன்களில் வந்த பாடல்களையும் தவிர்க்க வேண்டும், அதே சமயம் நண்பர் கானா பிரபாவின் கோரஸ் குவிஸ் நடைபெற்றதால் கோரஸ் கலந்த பாடல்களையும் தவிர்க்க வேண்டும் என்பது சில நேரம் ஆயாசத்தையும் அளித்தது.

நாங்கள் சந்தித்த இன்னொரு பெரும் சிக்கல் SOUND CLOUD தளத்தில் ஆவலுடன் தேர்வு செய்து ஏற்றிய நல்ல பல பாடல்களின் இசைத் துணுக்குகள் COPYRIGHT PROTECTION காரணமாக நீக்கப்பட்டு விட்டதே .. பின்பு அவற்றை விடுத்து மற்றொரு பாடலைத் தர நேர்ந்த பொழுதுகளில், மிகவும் ரசித்து எடுத்து வைத்த அப் பாடல்களைத் தர இயலாமல் போய்விட்டதே என்று பெரிதும் வருந்தி இருக்கிறோம்.

அதே போல் மாற்றுமொழிப் பாடல்களை இங்கு சனி, ஞாயிறு என இரண்டு நாட்களும் துவங்கியபோது முதலில் பெரிய வரவேற்பில்லை. பின்பு அவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டு ரசிக்கத் தொடங்கியபோது நாங்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த மாற்றுமொழிப் பாடல்களுக்கான தேடலில், நானும் சில பல அறியப்படாத நல்முத்துக்களை கண்டடைந்து பெரிதும் பரவசம் கொண்டேன் என்பது கூடுதல் போனஸ்.

இங்கு கலந்துகொண்ட சிறப்பித்த பல்வேறு நண்பர்களைப் பற்றி, நேற்றைய பதிவில் நண்பர் தேவா ஏற்கனவே விரிவாக எழுதிவிட்ட படியால் அதனை மீண்டும் சொல்லி, உங்களை போரடிக்க நான் விரும்பவில்லை. நீண்ட காலம் இது போன்று நடைபெறும் எந்த ஒரு போட்டியும், அதில் தினம் தவறாது கலந்துகொண்டு ஊக்கம் தரும் பங்கேற்பாளர்களின் உற்சாகமான ஆதரவின்றி சாத்தியமில்லை. எனவே உங்கள் அனைவருக்கும் மீண்டும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி 🙂

இளையராஜா என்னும் இசை ஆளுமை நமக்குக் கிடைத்த அரிய ஒரு பொக்கிஷம். அவர் இதுவரை நமக்கெல்லாம் வழங்கிய 5000 த்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கேட்டு, அதன் நுணுக்கங்களை ரசித்தும், லயித்தும் கிடக்கவே இந்த ஒரு ஆயுள் போதாது. அவர் அள்ளி வழங்கிய இசை முத்துக்களுக்கு நம்மால் செய்ய முடிந்த மரியாதை எல்லாம் இயன்ற அளவு அவரையும், அவரது இசையையும் எங்கும் கொண்டாடுவது ஒன்றே !

அடுத்து இந்தப் புதிர்ப் போட்டியை ஏற்று நடத்தவிருக்கும் இளைய தலைமுறையான நண்பர்கள் பரணி ராஜன், கார்த்திக் அருள் இருவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்.

மீண்டும் அக்டோபர் 15 அன்று சந்திப்போம்.

அன்புடன்

சரவணன்

 

 

#365RQS3 – நினைவலைகள் – பகுதி 1 – தேவா

இந்த 365 RQ Season 3 எனும் நீண்ட புதிர்ப் போட்டிக்கான பயணத்தில், எப்படி நான் நண்பர் சரவணனுடன்  சேர்ந்து ஒரு வருட காலம் பங்களித்தேன் என்பது எனக்கே ஆச்சர்யமான ஒரு உண்மை.

எனக்குப் பாடல்களும், இசையும் மிகவும் பிடிக்கும். அதிலும் ராஜாவின் இசை வாழ்க்கைக்கு நல்ல துணை போல. பிடித்ததை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ஒரு ஆனந்தம். பல நல்ல பாடல்கள் மக்களின் கவனத்திற்கு செல்லாமல் கடந்துவிட்டதே என்பதில் மிகுந்த வருத்தம். இந்த இரண்டு எண்ணங்களும்தான் பகிர்தலுக்கு உந்துதல். அதைப் பலரும் கேட்டு, கவனித்து தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டபோது அந்த உந்துதல் இன்னும் பலமாகியது. ஒரு வருட காலமாக நான் எழுதிய பதிவுகளை பொறுமையாகப் படித்து வந்ததற்காக நன்றி.

இந்த சீஸன் துவங்குவதற்கு முன்பு, பொதுவாக ஏதாவது பாடல் நன்றாக இருந்தால் ”கேட்டுப் பாருங்க நண்பர்களே, இப் பாடல் நல்லாயிருக்கு” என்பதைக் கடந்து மேலதிகம் நான் சொன்னதில்லை.

ஆனால் அந்தப் பாடல்களை இங்கு புதிரில் கொடுக்கும்போது அதைப் பற்றி பல விஷயங்கள் எழுத வேண்டும், அந்தப் பாடலைக் கண்டுபிடிக்க ஏதுவாக ஒரு சில வார்த்தைகளையும் சேர்க்க வேண்டும். இந்தப் புதிர்ப் போட்டியில் முடிந்த வரையில் ஏற்கனவே சொன்ன விஷயங்கள் திரும்பவும் வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. இவையெல்லாம் என்னை போன்ற ஆளுக்கு சவாலாக அமைந்தவை. ஏனென்றால் ரெக்ஸ் மாஸ்டர் எந்த ஒரு விஷயத்தையும் புதிரில் கலந்து அருமையாக எழுதுவார். பின்னர் வந்த மாஸ்டர்கள் பவள், ப்ரசன்னா, விநோத் மூவரும் ஜனரஞ்சகமாக எழுதியிருப்பார்கள். நான் இங்கு எழுதும்போது அவர்களின் அளவிற்கு எழுதவில்லையென்றாலும், அதற்கு அருகிலாவது இருக்க வேண்டுமல்லவா ?

நீங்க தினமும் மாலை 5:30 மணிக்கு புதிரை ஆவலுடன் கவனித்தது போல், நானும், சரவணனும் தினமும் காலையில் எழுந்தவுடன் நண்பர் @maestrosworld அவர்களின் பின்னூட்டத்தைக் கவனிப்பதுண்டு. அவர் எப்படி அணு அணுவாக ஒரு பாடலை உன்னிப்பாகக் கவனித்து ரசிக்கிறார் என்பதைப் படித்து வியந்ததுண்டு. அதே போல நம்ம @tparavai மற்றும் @kaarthikarul – இருவரும் தினமும் சரியான நேரத்திற்கு வந்து உடனுக்குடன் பதிலளிப்பார்கள். ஒரு வருட காலம் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் ஒரு செயலைச் செய்ய மிகுந்த சிரத்தை தேவை.

இவர்களைத் தவிர ராஜாவின் பாடல்களைக் கேட்டு, அதனால் ஈர்க்கப்பட்டு தினமும் அவர்களின் நேரத்தில் தவறாமல் பதிலளித்து எங்களுக்கு உந்துதலைத் தந்தவர்கள் @itamizh, @muthiahrm, @Qatarseenu, @rajabalanm, @sathishvasan, @nithyalaji, @_sangeethaa_, @_Obfuscated_, @usharanims, @i_vr @vbss75, @shanthi95, @ragavanpandian, @tamilan010, @jothishna. இவர்கள் எல்லாம் ராஜாவின் பல பாடல்களை, ஒலித் துணுக்குகளை ஏற்கனவே கேட்டிருந்திருப்பார்கள். ஆனால் ஒருவர் மட்டும் தினமும் LL க்ளூவை மட்டும் தனது துருப்பாக வைத்துக் கொண்டு தேடித் தேடி தவறாமல் இங்கு பதிலளித்தார். ஒரு சில நாட்கள் நான்கைந்து மணி நேரம் கூடத் தேடியிருக்கிறார் – அவர்தான் மதிப்பிற்குரிய @amas32.

பி. சுசீலாம்மாவின் பரம ரசிகரான @RagavanG பல நேரங்களில் நாமறியாத பல சுவையான தகவல்களை பின்னூட்டத்தில் தந்து நம்மை அசத்துவார். தனக்குத் தோன்றிய பாடலை, அதுவும் சில சமயங்களில் படப் பெயரை மட்டும் பதிலளித்துவிட்டுச் சென்ற @kuumuttai, பின்பு நமது பயணத்தில் கடைசியாக வந்து கலக்கிய @paramporul, @arafathsm. இவர்களின் விடாப்பிடியான பங்களிப்புதான் எங்களை தினமும் இப் புதிர்ப் போட்டியை நல்ல முறையில், எந்தக் குறையும் இல்லாமல் நடத்த வைத்தது.

நான் செய்தது நண்பர் சரவணனின் ஒரே ஒரு தொலைபேசி உரையாடல் மூலம் அவருடன் இந்தப் பயணத்தில் இணைந்ததுதான். ஏதோ ஒரு வேகத்தில் இந்த ஆளைச் சேர்த்தால், இவர் எழுதுகிற தமிழை எல்லாம் படிக்க வேண்டியிருக்கே என்று சரவணன் பின்பு யோசித்திருப்பார் (நான் எழுதிய பதிவுகளை முதலில் படித்து என்னிடம் இருக்கும் தமிழ் அகராதியை விட, தமிழ்ப் பிழைகளை கச்சிதமாகத் திருத்தி வெளியிட்டார்).

நேற்றைய புதிரில் சொன்னது போலவே ராஜாவின் இசையும், அந்த ஜீவ இசை கொடுக்கும் பேரானந்தமுமே இவை அனைத்திற்கும் மூல காரணம். உங்களைப் போலவே நானும் நண்பர்கள் @tparavai, @kaarthikarul இருவரும் நடத்தப் போகும் சீஸன் 4 புதிர்ப் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் காத்திருக்கிறேன். இருவரும் முதல் மூன்று சீஸன்களையும் விஞ்சி தூள் கிளப்புவார்கள் என்று நம்புகிறேன்.

அப்பாடா … இனி வரும் நாட்களில் அன்று கேட்டு ரசித்த பாடலை உடனே உங்களுடன் என்னால் பகிர்ந்து கொள்ளமுடியும் என்பதே பெரும் நிம்மதி. சிந்துபைரவி படத்தின் ஜனகராஜ் கணக்காக தலை வீங்கி அலைய வேண்டியதில்லை 🙂

பயணத்தைத் தொடர்வோம்.

அன்புடன்

தேவா

365/365 – #365RQS3 – கேட்டதனைத்தும் கொடுத்தேன் …

Tags

, , , , , , , , , , , , , , , , , , ,

அனைவருக்கும் வணக்கம்.

கடந்த 364 நாட்களாக ராஜாவின் பல பாடல்களைக் கேட்டு, அதை பல்வேறு கோணங்களில் பார்த்து, அதில் குறிப்பிட்ட இசையை எப்படி அந்தப் பாடலில், அந்த கால கட்டத்திலேயே ராஜா உபயோகித்தார் என வியந்திருக்கிறோம். அந்த இசையை நமக்குத் தெரிந்த வரையில் பல்வேறாக நம்மை அதனுடன் தொடர்புபடுத்தி நாம் இன்புற்றிருக்க, ராஜா என்ன நினைக்கிறார் என்பதை இந்த ஒலித் துணுக்கை கேட்டால் புரிந்து கொள்ளமுடியும்.

“மறுபடியும்” படப் பாடலில் கவிஞர் வாலி எழுதிய “கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது” எனும் வரிகளைப் போல, ராஜாவின் இசையும் காலத்தின் மரபுதான். அந்த இசையை தேடித் தேடி அள்ளிப் பருகும் இந்தப் புதிர்ப் போட்டியும் காலத்தின் மரபுதான்.

நானும், நண்பர் சரவணனும் இந்தப் புதிர்ப் போட்டியை எடுத்து நடத்தலாமா என்று விவாதிக்கும்போது,  இரண்டு Season களிலுமே பல நல்ல பாடல்களையும் கொடுத்து விட்டார்களே, நம்மால் 365 நாட்களுக்குத் தகுந்த பாடல்களை கொடுக்க முடியுமா என்ற தயக்கமே மேலோங்கியிருந்தது.

ஆனால் இன்று இந்த 365வது புதிரும் வந்தாச்சு. ஆனால் எடுத்து வைத்த நல்ல பல மற்றும் வித்தியாசமான பாடல்களைக் கொடுக்க நாட்கள் இடம் கொடுக்கவில்லையே என்ற எண்ணமே தற்போது மேலோங்கியிருக்கிறது. அதுதாங்க திரையிசையில் ராஜாவின் ஆளுமை !

இந்தப் போட்டியில் இத்தனை நாள் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி 🙂

பாடல் அமைந்த ராகம்: ஹமீர் கல்யாணி

இதோ இசைத் துணுக்கு:

 

Correct Answer:

* பாடல்: பாட்டாலே புத்தி சொன்னார்

   Song: Paattaale Buththi Sonnaar

* படம்: கரகாட்டக்காரன் (1989)

   Film: Karagaattakkaaran

* பாடலாசிரியர்: இளையராஜா

பாடலின் காணொளி இதோ:

 

LL Clue:

  This super hit film was directed by Gangai Amaran.

364/365 – #365RQS3 – தேவ கானம் !

Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

இன்று வருவதும் அட்டகாசமான ஒரு மெலடி ஜோடிப் பாடலே.

சில பாடல்கள் மட்டும் சிறு வயதில் கேட்க ஆரம்பித்ததில் இருந்தே நம்முடனேயே சேர்ந்து வளர்ந்து, எப்போதும் மனதில் ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும். பின்பு அப் பாடலை எப்போது கேட்டாலும் நம்மை மொத்தமாய் ஆதிக்கம் செய்யும். இந்தப் பாடல் எனக்கு அப்படியான ஒன்றே.

தமிழில் எத்தனையோ இசை அமைப்பாளர்கள் இருக்க, ராஜாவின் இசை மீது ஏன் இப்படியான தீவிரப் பற்று என்று கேட்டால், உடனே நினைவுக்கு வருவது & என் காதில் ஒலிப்பது இப் பாடலே. ஆயிரமாயிரம் நல்முத்துக்களை ராஜா அள்ளி அள்ளி நமக்கு வழங்கியிருந்தாலும், முதன்முதலில் அவரது இசையின் மேல் ஒரு தனி அபிமானத்தை, பிரமிப்பை உருவாக்கியது என்பதால் இந்தப் பாடல் ரொம்பவே ஸ்பெஷல்தாங்க.

நம்ம எஸ்பிபி, ஜானகி இருவரின் மதுரமான குரல்களில், சிலிர்ப்பூட்டும் இசைக் கோர்ப்பு கொண்ட இப் பாடல் கவிஞர் வாலி எழுதியது போல ஒரு “நீங்காத ரீங்காரம்”.

நாளையுடன் இந்த 365RQ Season 3 முடிய இருப்பதால், அற்புதமான இப் பாடலை இன்றே கொடுத்தாச்சு. உங்களுக்கும் இது பிடித்த பாடலாக இருந்தால், பின்னூட்டத்தில் விளக்கமாகப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இது வரை 365RQ Season 3 வில் தினந்தோறும் கலந்துகொண்டு பெரும் ஊக்கம் தந்த மற்றும் வாழ்த்திய அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் என் சார்பிலும், நண்பர் தேவா சார்பிலும் மனமார்ந்த நன்றி, நன்றி 🙂

அடுத்து வரப் போகும் 365RQ  Season 4 புதிர்ப் போட்டியை நமது நண்பர்கள் பரணி ராஜன் @tparavai & கார்த்திக் அருள் @kaarthikarul இருவரும் இணைந்து நடத்தவிருக்கிறார்கள்.

அந்தப் போட்டி இன்னும் பல மடங்கு சிறப்பாக அமையும் என்பதிலும், உங்கள் அனைவருக்கும் ராஜாவின் இசையில் வெளிவந்த, பரவலாக அறியப்படாத பல நல்முத்துக்களை அறிமுகம் செய்யும் என்பதிலும் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அப் போட்டி துவங்கும் தேதி மற்றும் விதிமுறைகளை அவர்களே விரைவில் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

முதலிரண்டு சீஸன்களைப் போலவே, 365 RQ Season 4 Quiz ல் மீண்டும் போட்டியாளர்களாகப் பங்கேற்க நானும், நண்பர் தேவாவும் ஆவலாக உள்ளோம். உங்கள் அனைவரின் ஆதரவும் இப்படியே அடுத்த சீஸனுக்கும் தொடரட்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இதோ இசைத் துணுக்கு:

 

Correct Answer:

* பாடல்: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

   Song: Sandhanak Kaatre Senthamizh Ootre

* படம்: தனிக்காட்டு ராஜா (1982) – Thanikkaattu Raja

* பாடலாசிரியர்: கவிஞர் வாலி

பாடலின் காணொளி இதோ:

 

LL Clue:

  The hero of this movie – Rajnikanth.

 

 

363/365 – #365RQS3 – நிலமும் வானும் நமக்கு சாட்சி …

Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

இன்று வருவது மிக இனிமையான ஒரு மெலடி ஜோடிப் பாடலே.

கல்லூரியில் ஒரு சிறு மோதலில் ஆரம்பித்துப் பின்பு காதல் மலரும் ஜோடியின் கொண்டாட்டமே இந்தப் பாடலுக்கான சூழல். இயக்குநரும் பாடலை வித்தியாசமாகப் படம் பிடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி என்னென்னவோ ஒளி அலங்காரம் செய்து, திரையாக்கத்தை ஒரே வண்ணமயமாக்கியிருப்பார்.

இந்தப் பாடலைக் கொண்டாடத்தான் எத்தனை எத்தனை விஷயங்கள் – மயக்கும் ராஜ இசை, யேசுதாஸின் கந்தர்வக் குரல் மற்றும் கொஞ்சிக் குழையும் பாடகி …. இன்றெல்லாம் பாடல்களில் கேட்பதே அரிதாகிவிட்ட தபலா இசை இந்தப் பாடலைக் கொண்டு செல்லும் இதமும் காதுகளுக்கு விருந்து. ராஜாவின் அழகிய மெட்டுக்கும், கவிஞர் வாலியின் கச்சிதமான பாடல் வரிகளுக்கும் நெடுங்காலமாக இருந்து வரும் அந்த இறுக்கமான பிணைப்புக்கும் இந்தப் பாடல் ஒரு அருமையான அத்தாட்சி.

இந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான அழகு, ஆனால் இந்தப் பாடல் மட்டும் தனித்து ஜொலிக்கும். நாம் சற்றே தொய்வாக உணரும் பொழுது, மனதை உற்சாகமாக மாற்றம் செய்ய உடனடி நிவாரணியாக இந்தப் பாடலை பயன்படுத்தலாம் 🙂

இந்த சீஸனில் நிச்சயமாகத் தரவேண்டும் என்று முன்பே எடுத்த வைத்த பாடலிது. எனக்கு மிகவும் பிடித்த, கேட்கும் போதெல்லாம் நாளங்களுக்குள் புது ரத்தம் பாய்ச்சும் இப் பாடலை இங்கு வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி 🙂

பாடல் அமைந்த ராகம்: கல்யாணி

பிரபலமான பாடல்தான், நீங்களும் கேட்டுட்டு சொல்லுங்க.

இதோ இசைத் துணுக்கு:

 

Correct Answer:

* பாடல்: கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே

   Song: Kannaale Kadhal Kavithai Sonnaale

* படம்: ஆத்மா (1993) – Aathmaa

* பாடலாசிரியர்: கவிஞர் வாலி

பாடலின் காணொளி இதோ:

 

LL Clue:

  The story of this film was inspired from the novel ” The Miracle ” by Irving Wallace.

 

362/365 – #365RQS3 – இங்கேதான் நிம்மதி !

Tags

, , , , , , , , , , , , , , , ,

இன்று வருவதும் இனிதான ஒரு SOLO பாடலே.

இந்தப் பாடல் ராஜா நம்மை நோக்கிப் பாடுவதாகவே அமைந்த ஒன்று. அவரது கடந்து வந்த பாதை & நினைவலைகளைப் பகிர்வதாகவும், நம் மண்ணின் பெருமையை அழகாக எடுத்துரைப்பதாகவும் செதுக்கப்பட்ட பாடல்.

மொத்தத்தில் ராஜாவின் “சொர்க்கமே என்றாலும்” மற்றும் “ரசிகனே என் அருகில் வா” பாடல்களின் நவீன வடிவம் என்றும் சொல்லலாம். கவிஞர் வாலியின் அர்த்தமிக்க வரிகளில் இப் பாடல், கேட்கும் நமக்குள்ளும் சில வினாக்களை எழுப்பும்.

நீங்களும் கேட்டுட்டு சொல்லுங்க.

இதோ இசைத் துணுக்கு:

 

Correct Answer:

* பாடல்: உலகம் இப்போ எங்கோ போகுது

   Song: Ulagam Ippo Engo Pogudhu

* படம்: அழகர் மலை (2009) – Azhagar Malai

* பாடலாசிரியர்: கவிஞர் வாலி

பாடலின் காணொளி இதோ:

 

LL Clue:

 The actor who appeared in the villain character of the film “Avan Ivan” donned the role of the hero in this film.

 

361/365 – #365RQS3 – வேலை கிடைச்சிருச்சு !

Tags

, , , , , , , , , , , ,

நேற்றைய பாடல் எப்படியிருந்தது ?

ராஜாவின் அந்த உற்சாகத்தை இன்னும் அதிகமாக இன்றைய பாடலில் உணரலாம். ராஜாவின் குரலில் படத்தின் ஆரம்பப் பாடல் இருந்தால் படத்தின் வெற்றி நிச்சயம் என்று தயாரிப்பாளரும், இயக்குநரும் நம்பிக்கை வைத்திருந்த காலகட்டத்தில் வந்த படம் இது.

ராஜாவின் குரலில் என்ன ஒரு துள்ளல் … அதைவிட பாடலின் பின்னணியில் வரும் இசைக் கோர்ப்பின் துள்ளாட்டம் மிக உற்சாகமாக இருக்கும். உங்களுக்கு என்ன வேலை இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப் பாடலைக் கண்டுபிடிங்க. இதுவும் வேலைதான் நமக்கு 🙂

இதோ இசைத் துணுக்கு:

 

Correct Answer:

* பாடல்: வேலை வேலை எல்லோர்க்கும் உண்டு

   Song: Velai Velai Ellorkkum Undu

* படம்: பிக் பாக்கெட் (1989) – Pick Pocket

* பாடலாசிரியர்: இளையராஜா

 

LL Clue:

 Sathyaraj was the hero of this movie.

360/365 – #365RQS3 – நாட்டுப்புறப் பாட்டு !

Tags

, , , , , , , , , , , ,

இன்று வரும் பாடலைப் பாடிய பாடகரின் குரல் எல்லாம் கேட்கவே நன்றாக இல்லை என பலர் கூற நான் கேட்டதுண்டு. ”என்னடா இப்படி சொல்லுகிறார்களே” என நான் யோசித்ததும் உண்டு.

உண்மையில் இந்தப் பாடகரைப் போல அந்தப் பாடலுக்கான உணர்வுகளை அப்பட்டமாக வெளிக் காட்டுவதில் இவருக்கு நிகர் இவரே. ஒரு சில பாடல்களை அதன் உணர்வுகளை தான் உணர்ந்தது போல மற்ற பாடகர்கள் உணரத் தவறிவிடுவார்களோ என்று அவர் இசையமைத்த ஒரு சில பாடல்களை அவரே பாடுவதும் உண்டு.

தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் பாடியிருக்கிறார், ஆனால் எல்லா மொழிகளிலும் அந்த மொழியின் இனிமையை குலைக்காமல் பாடுவார். அப்படி ஒரு மலையாள மொழிப் பாடல்தான் இது. இதில் இவர் கொடுக்கும் உணர்வுகளும், அதை உற்சாகமாகப் பாடும் ஈடுபாடு என பின்னியெடுத்திருப்பார்.

இந்தப் பாடலைக் கேட்டால், பதிவின் ஆரம்பத்தில் சொன்னவையெல்லாம் இவரின் பாடல்களை ஊன்றிக் கேட்காமல் போனவர்களின் எண்ணங்கள்தான் எனப் புரிந்து கொள்ளலாம்.

இதோ வயலின்கள் சங்கமாகும் இசை, நீங்களும் சங்கமாக:

 

Correct Answer:

* பாடல்: பண்டத்தே நாட்டின்புரம்

   Song: Pandathe Naattinpuram

* படம்: பொன்முடிப் புழயோரத்து (2005)

   Film: Ponmudip Puzhayorathu (Malayaalam)

 

LL Clue:

 Sheela played an important role in this movie.

 

359/365 – #365RQS3 – உணர்ந்தேன் நான் …

Tags

, , , , , , , , , , , ,

இன்று வருவது தெலுங்கு மொழியில் இருந்து ஒரு SOLO பாடல்.

படத்தின் முக்கியமான ஒரு கட்டத்தில் இடம் பெறும் பாடலிது. இப் பாடலின் சூழல் குழந்தையை ஆறுதல் படுத்தும் தாலாட்டாகவும், அதே சமயம் அவனது குற்றங்களைப் பூரணமாக உணர்ந்து கசிந்துருகும் நாயகனின் கழிவிரக்கமாகவும் அமைந்தது. இதற்கு ராஜா படைத்த இந்த உருக்கமான பாடல் கேட்கும் நம்மையும் அந்தச் சூழலுக்குள் உடனே ஒன்ற வைக்க வல்லது. தவறிழைப்பதும், பின்பு அதை உணர்ந்து வருந்துவதும் சராசரி மானிடனின் இயல்புதானே !

சாந்தமும், சோகமும் மாறி மாறி இழையோடும் இப் பாடலை நம்ம எஸ்பிபியின் குரலில் கேட்பது கூடுதல் நெகிழ்ச்சி. மொழி மாற்றம் செய்யப்பட்ட இப் படத்தின் தமிழ்ப் பாடலைக் கேட்டால், இந்த மூலப் பாடலுக்கு எஸ்பிபியின் பங்களிப்பு எத்தனை சிறப்பானது என்பது தெளிவாகப் புரியும்.

பொதுவாக ராஜ இசையில் சோகப் பாடல்களை (அவை தரும் பாதிப்பினால்) நான் அடிக்கடிக் கேட்பதில்லை. இந்தப் பாடல் மட்டும் விதிவிலக்கு … அதற்கு இந்தப் பாடல் நம் மனதுக்கு அளிக்கும் சொல்லவியலா ஒரு நிம்மதி கூடக் காரணமாக இருக்கலாம்.

பாடல் அமைந்த ராகம்: மத்யமாவதி

நீங்களும் கேட்டுட்டு சொல்லுங்க.

இதோ இசைத் துணுக்கு:

 

Correct Answer:

* பாடல்: லாலி ஜோ லாலி ஜோ ஊருகோ

   Song: Laali Jo Laali Jo Ooruko

* படம்: இந்த்ருடு சந்த்ருடு (1989)

   Film: Indrudu Chandrudu (Telugu)

பாடலின் காணொளி இதோ:

 

LL Clue:

 This movie was produced by D. Rama Naidu and it had a stellar cast. It was later dubbed in Tamil also.